Monday, September 28, 2009

என் நினைவுகளில்-எம் ஜி ஆர்





வருடம் 1980.

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு திருச்சியில் படித்துக்கொண்டு இருந்தபோது அப்போது நடைபெற இருந்த தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு புரட்சித்தலைவர் வருகிறார். எங்கள் கல்லூரியில் குறிப்பிட்ட மாணவர்கள் என்னைப்போல அப்போது எம் ஜி ஆர் அவர்களின் தீவிர ரசிகர்களாக , அவர் தம் கொள்கை பிடித்தவர்களாக இருந்தோம். எல்லோரும் சேர்ந்து திருச்சி வரும் எம் ஜி ஆர் அவர்களை பார்த்து பேசவேண்டும் என்று ஆவலாக அன்று முன்னாள் வருவாய்துறை அமைச்சராக இருந்த அண்ணன் எஸ் டி சோமசுந்தரம் அவர்களை அணுகி நேரம் கேட்டோம். அனுமதி கிடைக்கவே கல்லூரி மாணவர்கள் தேர்தல் நிதி என்று உடனே வசூல் செய்தோம் அன்று சுமார் 2000 ரூபாய் வரை வசூலானது.

அதை தலைவரிடம் கொடுக்க மாலை ஆறு மணி சுமாருக்கு
திருச்சி அரிஸ்டோ ஹோட்டல் சென்றோம் அவர் பயணம் வந்த நீல நிற பிளைமௌத் கார் நின்றிருந்தது. தலைவரை பார்க்க காத்திருந்தோம். எங்கள் கைகளில் பெரிய ரோஜா மாலை இருந்தது.
தனி அறையில் இருந்த தலைவரிடம் எங்கள் வருகை சொல்லப்பட., மாணவர்களின் தேர்தல் நிதி சிறிய அளவிலானது என்றாலும் எங்களை பார்க்க வந்த அவரின் அன்பு அளவிடமுடியாதது.
எம் ஜி ஆர் அவர்கள் வெளியே வருகிறார்கள்.,


எங்களின் சார்பாக ரோஜா மாலை அணிவிக்கிறோம்.
அவரை பார்த்த நாங்கள் எல்லோரும் வோடோடிச்சென்று கை குலுக்க சென்றோம்.
எல்லோரிடமும் அன்பாக கை குலுக்கினார் என் முறை வந்தபோது நீண்ட நேரம் அவர் கைகளை விட மனமில்லை.

என் சிறு வயது திரை நாயகன், எவ்வளவு படங்களில் அரசனாக , இளவரசனாக., அநியாயத்தை எதிர்த்து கேட்கும்
கதாநாயகனாக திரையில் பார்த்து பார்த்து ரசித்த அவர் முகம் என் அருகில் என்பதை நினைத்து பார்பதற்கே கனவா நினைவா என்று இருந்தது.

அந்த இடத்தை விட்டு விலகிச்செல்ல மனமே வரவில்லை. அவரை சந்தித்த அந்த நேரம் என் மனதை விட்டு அகலவே இல்லை. திருச்சி , தஞ்சை என்று தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்த செய்திகள் பத்திரிக்கையில் படித்தேன்.
1980 தேர்தல் முடிந்தது., அமோக வெற்றி பெற்று மீண்டும் முதலாம் ஆனார் என்பது வரலாறு.


அவரின் இனிய முகமும்
வள்ளல் குணம் ., பிறரை மதிக்கும் பண்பும் - என்றென்றும் பேசப்பட்டுகொண்டே இருக்கிறது.ஏழை பங்காளன் .,புரட்சி நடிகர் .,பொன்மனச்செம்மல் ., மக்கள் திலகம் .,வாத்தியார் , புரட்சித்தலைவர் என்று புகழ் பெற்றவர். இவரைப்போல தலைவர்களால்
உண்மையில் பட்டங்களுக்கத் தான் பெருமை என்றால் மிகையில்லை.
காலத்தை வென்றவன் நீ ., காவியமானவான் நீ !- அவர் நடித்த படப்பாடல் அவருக்கே பொருந்தும் -அவர் ஒரு சகாப்தம்.


என் அறைக்கு வந்து ., எனது நண்பர்களிடம் இந்த நிகழ்ச்சியை வாரக்கணக்கில் சொல்லி சொல்லி மகிழ்ந்தேன்.
என் கனவு நாயகனான அவரை சந்தித்த அந்த நாள் மறக்க முடியாத நாள்.







>

3 comments:

அது ஒரு கனாக் காலம் said...

சூப்பர் ...நானும் ஒரு முறை தலைவரை நேரில் பார்த்திருக்கிறேன்

அது ஒரு கனாக் காலம் said...

அதை பற்றிய ஒரு பதிவு ...
http://trichisundar.blogspot.com/2009/05/6.html

மலரகம்(நாகங்குயில்) said...

நன்றி நண்பரே
உங்கள் இடுகையிலும் படித்தேன்.

Post a Comment