Tuesday, October 20, 2009

9 வது உலகத்தமிழ் மாநாடா?-உலகத் தமிழ் செம்மொழி மாநாடா?

இன்று (20-10-2009 ) பத்திரிகையில் வந்த செய்தியை அப்படியே கிழே தருகிறேன்:-

உலகத் தமிழராய்ச்சி சங்கத் தலைவர் நொபுரு கரஷிமா ஆட்சேபித்ததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என நடத்த, தமிழக அரசு முடிவு செய் துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மாநாடுக்குச் சென்ற முதல்வர் கருணாநிதி, கூட்டம் துவங்கியதும், "உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் நடத்தப் படும்' என அறிவித்தார். உலகத் தமிழ் மாநாடு நடத்த, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த சங்கத்தின் ஒப்புதல் பெறாமலேயே மாநாடு தேதி அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் குழந்தைசாமி உள்ளிட்ட சில உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டுமென, ஜப்பானில் உள்ள பேராசிரியரான சங்கத் தலைவர் தலைவர் நொபுரு கரஷிமா மற்றும் சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால், ஜூன் மாதம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடத்தலாமென, முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவன உறுப்பினர்கள் முடிவு செய்தனர். ஆனாலும், ஜப்பானில் உள்ள சங்கத் தலைவர் இதற்கு சம்மதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் தான் நடத்த வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். ஆனால், தமிழக சட்டசபைக்கு 2011 மே மாதத்துக்குள் தேர்தல் நடக்கும் என்பதால், அதையொட்டி மாநாடு நடத்த தமிழக அரசு விரும்பவில்லை. மேலும், உலகத் தமிழராய்ச்சி சங்கத் தின் சில உறுப்பினர்களும் ஜூன் மாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இப்பிரச்னை காரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா  நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், தமிழ் செம்மொழியானதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுமென சூசகமாக தெரிவித்தார். இதற்கிடையே, வெளிநாடுகளில் உள்ள உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்ந்துபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிலர் சம்மதித்த போதிலும், ஜூன் அல்லது ஜூலையில் மாநாட்டை  நடத்த சிலர் சம்மதிக்கவில்லை. எனவே, சர்ச்சையுடன் மாநாட்டை நடத்த முதல்வர் விரும்பவில்லை. இதன் காரணமாக, நாமே செம்மொழி மாநாடாக நடத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை முதல்வர் தெரிவித்துள்ளார். இதை, இங்குள்ள மற்ற உறுப்பினர்கள் ஏற்றனர். இதன்பின், தீபாவளிக்கு முதல் நாளன்று, சென்னையில் உள்ள செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் நடந்த கூட்டத்தில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த முடிவு செய்யப் பட்டது. கோவையிலேயே இந்த மாநாட்டை ஜூலையில் நடத்த தேதியும் இறுதி செய்யப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் இவ்வளவு அவசரம்? இப்படி பெயர் மாற்றி உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டால்
இனி  வரும் காலங்களில் 11., 12., வது நடத்தப்படும்போது., உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-2 என பெயர் வைப்பார்களா? ., அப்படி வைக்கப்படும் பொது ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாடுகள் பற்றி குழப்பம்  ஏற்படும்  அல்லவா?
சுய விளம்பரம் தேடிக்கொள்ள ஆளுவோர்க்கு தமிழ் தான் கிடைத்ததா?
ஆட்சியில் செய்த திட்டங்கள், பலன்கள், சாதனைகள் என்று இருப்பதை சொல்லி மக்களை சந்திக்காமல் , அவற்றோடு இந்த மாநாட்டினையும் சேர்ப்பதர்க்கா? என மக்கள் சிந்திக்கமாட்டார்களா?
எல்லாம் கலைஞரவர்களுக்கே வெளிச்சம்.
>

0 comments:

Post a Comment