Friday, October 23, 2009

மத்திய தொலைத்தொடர்பு துறை அலுவலகங்களில் திடீர் ரைடு-பின்னணி என்ன?

மத்திய தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் திடீரென்று மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது தலைநகர வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக் கட்சியான திமுகவின் தலைமை காங்கிரஸ் கட்சியையும், பிரதமரையும் வற்புறுத்தி தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சராக மீண்டும் ஆ. ராசாவே நியமிக்க வைத்தது முதலே, இதுபோல ஒரு விசாரணை வளையத்தில் அமைச்சர் ஆ. ராசா சிக்க வைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆ. ராசாவுக்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தரப்பட வேண்டும் என்பதில் திமுக தலைமை பிடிவாதம் பிடித்தது பிரதமர் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த எல்லா சம்பவங்களிலும் திமுக எடுத்த நிலைப்பாட்டைக் காங்கிரஸ் தலைமை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையிலும் திமுக அரசின் செயல்பாடுகளில் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தெரிகிறது.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் திமுகவினரால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டனர் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வெற்றியை அவர்தான் உறுதி செய்து கொள்ள வேண்டி வந்ததாகவும், இந்த விஷயத்தில் திமுக அவருக்கு எதிராக வேலை செய்ததாகவும்கூட வதந்திகள் உண்டு. அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலுவும் திமுகவினரின் முழுமையான ஒத்துழைப்புத் தரப்படாமல் தான் தோல்வி அடைந்ததாக மேலிடத்துக்குக் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் செயல்பாடுகள் பற்றி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் விமர்சித்ததாகவும், அவரும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போலத் தமிழகத்தில் மீண்டும் காங்கிரûஸ வலுப்படுத்துவதற்கு உறுதி எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இதுபோல அதிரடிச் சோதனைகளும், அதன் மூலம் திமுகவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும் காங்கிரஸ் மேலிடத்தின் திட்டம் என்று தில்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த சோதனைகளைக் காரணம் காட்டி ஆ. ராசாவின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

தில்லியில் உள்ள ஒரு மூத்த பத்திரிகையாளர் வேறு விதமாக இந்த சோதனையை விளக்க முற்பட்டார். ""நீங்கள் ஏன் காங்கிரஸ் தலைமையைக் குற்றம் சாட்டுகிறீர்கள்? ஒரு வேளை முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர் ஆ. ராசாவின்மீது அதிருப்தி ஏற்பட்டு, அவரே இந்த சோதனைக்கு ஏன் அனுமதி அளித்திருக்கக் கூடாது? முதல்வர் கருணாநிதியைக் கலந்தாலோசிக்காமல் சோனியா காந்தியோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ ஒரு திமுக அமைச்சரின் துறையில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனை நடத்த அனுமதித்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!'' என்கிறார் அவர்.

தில்லி அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் காணப்படும் கருத்து என்னவென்றால், திமுகவுடனான காங்கிரஸின் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான். மாநிலத்தில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளக் காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், திமுக தலைமை, அதாவது முதல்வர் கருணாநிதி, காங்கிரஸின் நிபந்தனைகளுக்குப் பணிந்து கொடுப்பாரே தவிர கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார் என்பதால், இதுபோன்ற புலனாய்வுத் துறை சோதனைகள் திமுக தலைமையை பயமுறுத்தும் முயற்சியாக இருக்கக் கூடும் என்றுதான் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமணி 
>

1 comments:

வரதராஜலு .பூ said...

//தில்லியில் உள்ள ஒரு மூத்த பத்திரிகையாளர் வேறு விதமாக இந்த சோதனையை விளக்க முற்பட்டார். ""நீங்கள் ஏன் காங்கிரஸ் தலைமையைக் குற்றம் சாட்டுகிறீர்கள்? ஒரு வேளை முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர் ஆ. ராசாவின்மீது அதிருப்தி ஏற்பட்டு, அவரே இந்த சோதனைக்கு ஏன் அனுமதி அளித்திருக்கக் கூடாது? //

நல்ல சகுனி வேலை. செய்ங்கடா செய்ங்க

//இதுபோன்ற புலனாய்வுத் துறை சோதனைகள் திமுக தலைமையை பயமுறுத்தும் முயற்சியாக இருக்கக் கூடும் என்றுதான் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்//

ஆக மொத்தம் தப்பு நடந்திருந்தாலும் ஒண்ணும் ஆக்ஷன் எடுக்கப்போறது இல்ல. அப்படிதானே?

வெறுமனே பயமுறுத்தறதுக்குதான் சிபிஐ. ம்ம்ம்ம்

Post a Comment