மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நவம்பர் 1ம் தேதி மதுரையில் மத்திய அமைச்சரவையைக் கண்டித்து திமுக நடத்தும் கூட்டத்தில் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசுடனும், காங்கிரசுடனும் திமுகவுக்கு ஏற்பட்டு வரும் கருத்துவேறுபாடு மோதலாக உருவாகி வருவதால் இத்தகைய நிலைப்பாட்டை நிச்சயம் திமுக எடுக்கும் என்று தெரிய வருகிறது.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு புதிய கட்சிகளின் ஆதரவும் வலிய வந்தது. இதனால் கடந்த 2004 முதல் 2009 வரையிலான மத்திய ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு கிடைத்த மதிப்பும், மரியாதையும் இப்போது இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த மத்திய ஆட்சிக் காலத்தில் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் மதித்து, அவரது மனம் கோணாமல் நடந்து கொண்டனர். மத்திய அரசு எந்தவொரு முக்கிய முடிவெடுத்தாலும் கருணாநிதியிடம் கலந்தாலோசித்தனர்.
அடிக்கடி மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்து கோபாலபுரத்திலும், சிஐடி நகரிலும், அறிவாலயத்திலும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
சோனியாகாந்தியே மூன்று முறை தமிழகம் வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். தவிரவும், மத்திய அமைச்சரவையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மூன்று கேபினட் அமைச்சர்களும், 4 இணை அமைச்சர்களும் இடம்பெற காங்கிரஸ் வாய்ப்பளித்திருந்தது. அவர்கள் கேட்ட இலாக்காக்களும் தரப்பட்டன.
ஆனால், இம்முறை நிலைமை அப்படியில்லை. கடந்த முறை பேரன் தயாநிதி மாறனுக்கு எந்தவித ஆட்சேபமின்றி கேபினட் பொறுப்பு வாங்க முடிந்த கருணாநிதிக்கு இம்முறை தனது மகன் மு.க.அழகிரிக்கு கேபினட் பொறுப்பு வாங்க போராட வேண்டியிருந்ததாம்.
சேதுசமுத்திரத் திட்டம், செம்மொழி அந்தஸ்து, கேட்ட அளவுக்கு நிதி ஒதுக்கீடு என்று மத்திய அரசிடம் கடந்தமுறை எல்லாம் பெற்ற கருணாநிதியால் இம்முறை ஒரு துணை அமைச்சர் தந்த அனுமதியைக் கூட திரும்பப் பெற முடியவில்லை.
கடந்த காலத்தின் போது மத்திய அமைச்சரவையின் "ரிமோட்' கருணாநிதியின் கையில் என்று வீராப்புப் பேசி வந்த திமுகவினர் இன்றைய கையறு நிலை கண்டு கொதித்துப் போயுள்ளனராம்.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் இரண்டு முறை பிரதமருக்கு கருணாநிதி கடிதங்கள் எழுதியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மகிவும் விவாதத்திற்குரிய பிரச்சனையாக இது மாறி, உச்சநீதிமன்றம் சென்று மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு தடை கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியும்,
ஒரு மாநில முதலமைச்சர், அதுவும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சியின் தலைவர் மத்திய அரசை ஆளும் மாநிலம் எது? என்று கோபமாகக் கேள்வி எழுப்பியும் சோனியா காந்தியோ, பிரதமரோ சட்டை செய்யாமல் எதுவும் கருத்துக் கூறாமல் இருப்பது தமக்கு ஏற்பட்ட அவமானம், தமிழக அரசுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்று கருணாநிதி கருதுகிறாராம். இதனால் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கலந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தவிர, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரான மு.க.அழகிரி மத்திய அமைச்சரவையில் நீடிக்க விருப்பம் இல்லை என்று கூறி வருகிறாராம். அவரை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்வதைவிட, ஒட்டு மொத்தமாக மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கலாம் என்று திமுக வட்டாரத்திலேயே கூறுகின்றனர்.
இதற்கிடையே, முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் எடுத்த முடிவை ஆட்சேபித்து, அவருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியே பங்கேற்பார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே மத்திய அரசை எந்த மாநிலம் ஆள்கிறது? என்று கேள்வி எழுப்பியதால் கருணாநிதி மீது கோபம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்தக் கண்டனக் கூட்ட அறிவிப்பால் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளதாம். அதன் எதிரொலி தான் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் துறை அலுவலகத்தில் சிபிஐ சோதனை என்றும் டெல்லி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பரஸ்பரம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் உருவாவதற்கான அறிகுறி தென்பட்டு விட்டது.
மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்தால், இங்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் ஆபத்தில்லை என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது. இதுவரையிலும அதிமுக அணியில் இருந்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது அந்த அணியில் இல்லை.
மேலும் ஏற்கனவே திமுக அரசுக்கு இவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து கவர்னரிடம் வழங்கிய கடிதங்களை இவர்கள் யாரும் திரும்பப் பெறவில்லை. எனவே பாமகவின் 18 எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகளின் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு திமுகவுக்கு இருப்பதால், காங்கிரசின் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையில்லை என்று திமுக கருதுகிறதாம்.
எனவே, மதுரையில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தின் போது மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதற்கான அறிவிப்பு வெளியாவது உறுதி என மதுரை திமுக வட்டாரம் கூறுகிறது.
நன்றி-மாலைச்சுடர்(23-10-2009)
>
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தி மு க வின் மத்திய மந்திரிகள் ராஜினாமா ?
சற்று முன் மாலைச்சுடரில் படித்துவிட்டு இந்த இடுகையை தமிழ் மனத்திலும், தமிலிஷ் இலும் இணைத்த உடன் எனது ப்லொக்கிற்கு எவ்வளவு வருகையாளர்கள்? இந்த செய்தி ஹேஷ்யமாக
மாலைச்சுடரில் வந்திருக்கிறது., யப்பா எவ்வளவு பேருக்கு உண்மையாகவேனும் என்ற ஆசையோ? அல்லது எவ்வளவு பேருக்கு ஐயோ பாவம் என்றிருக்குமோ?
ஆனால் இந்த செய்தியில் குறிப்பிட்ட்டிருக்கின்ற சம்பவங்கள் ஒருவேளை நடக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போமே.
ha ha .good joke of the year.
Post a Comment